×

கவனம் தேவை

பண்டிகை காலம் நெருங்கி உள்ள நேரத்தில் மீண்டும் ஒருமுறை நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நேரத்தில் அதிக எண்ணிக்கையில் தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் உஷாராக இருக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் எச்சரித்து உள்ளன. ஏனெனில் பண்டிகை காலத்தில் மக்கள் கூட்டமாக திரள்வார்கள். அடுத்த வாரம் புத்தாண்டு கொண்டாட்டமும், அதை தொடர்ந்த நாடு முழுவதும் மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகைகள் கொண்டாடப்படும் நேரத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 2019 நவம்பர் மாதம் சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா தொற்று உலகையே புரட்டிப்போட்டு விட்டது.

ஒருவழியாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், உருமாறிய தொற்று என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அந்தவகையில் ஒமிக்ரான் உருமாற்றதொற்று பெரும் பாதிப்புகளையும், இழப்புகளையும் இந்தியாவில் ஏற்படுத்தி சென்றுவிட்டது. தற்போது வரை ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ கொரோனா பலி எண்ணிக்கை மட்டும் 5.33 லட்சமாக உள்ளது. இப்போது மீண்டும் சீனாவில் பரவ ஆரம்பித்த ஜேஎன்.1 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. சிங்கப்பூரில் பரவும் வேகம் அதிகமாக உள்ளதால் அங்குள்ள மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவிலும் கோவாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த தொற்று தற்போது நாடு முழுவதும் பரவி விட்டது.

நாடு முழுவதும் 63 பேர் ஜேஎன்.1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக, கோவாவில் 34 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஜேஎன்.1 வைரஸ் பரவலை தடுக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் மகாராஷ்டிராவில் 9 பேர், கர்நாடகாவில் 8 பேர், கேரளாவில் 6 பேர், தமிழ்நாட்டில் 4 பேர், தெலங்கானாவில் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 4 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டாலும், அவர்கள் அத்தனை பேரும் குணமாகி விட்டனர்.

இந்த தொற்று அதிகவேகமாக பரவக்கூடியது. ஆனால், இந்த தொற்றால் பெரிய பாதிப்பு இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. ஜேஎன்.1 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் தற்போது பரவும் ஜேஎன்.1 வகை தொற்றால் ஏற்படுவது மிதமான பாதிப்புதான் என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் தற்போது பண்டிகை காலம் என்பதால் அனைத்து மாநில அரசுகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியே வருவார்கள் என்பதால் பெரியவர்கள், குழந்தைகள் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது முககவசம் அணிந்து வந்தால் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசின் அறிவுரையைப்பின்பற்றி பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் தாமாகவே முககவசம் அணிந்தால் கொரோனா பாதிப்பை தவிர்க்கலாம். ஒமிக்ரான் போன்று ஜேஎன்.1 வகை இந்தியாவில் மிகவும் வலுவான ஒன்றாக உருமாறி விட்டால் மிகவும் ஆபத்தாக அமைந்து விடும். எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது கூடுதல் கவனம் தேவை.

The post கவனம் தேவை appeared first on Dinakaran.

Tags :
× RELATED மன்னார் வளைகுடாவில் காற்று சுழற்சி...